Thursday, October 10, 2013

அணுத்திருசியங்கள்/அணுநிறமாலைகள் (Atomic Spectrum)

சக்தி கூடிய முதல்களிலிருந்து இழக்கப்படும் சக்திக் கதிர்ப்புக்களின் மூலம் பின்வரும் மூன்று வகையான திருசியங்களை/ நிறமாலைகளைப் பெறலாம்.

1. தொடர் நிறமாலை (Continuous Spectrum)
2. கோட்டு நிறமாலை (Line Spectrum)
3. பட்டை நிறமாலை (Band Spectrum)

தொடர் நிறமாலை (Continuous Spectrum)
சூரிய ஒளியை ஒரு சிறு கற்றையாக ஒரு அரியத்தினூடாக செலுத்தி வெளியேறும் ஒளியை ஒரு திரையில் விழுத்தும் போது வானவில்லின் நிறங்களைக் கொண்ட ஒரு நிறக்கூட்டம் (VIBGYOR) தோன்றும். இவ்வாறு பெறப்பட்ட நிறக்கூட்டம் ஒரு திருசியம் ஆகும். இது தொடர் நிறமாலை (Continuous Spectrum) எனப்படும்.

கோட்டு நிறமாலை (Line Spectrum)
அணுக்களின் மூலம் தோற்றுவிக்கப்படும் நிறமாலைகள் கோட்டமைப்பைக் கொண்டதாகும். இந்நிறமாலைகள் இரு வகைப்படும்.
1. உறிஞ்சல் நிறமாலை
2. காலல்நிறமாலை 
ஒரு வாயுவை வெப்பமாக்கியோ அல்லது உயர் அழுத்தம் உள்ள மின்னைச் செலுத்தியோ பதார்த்தத்தில் இருந்து கதிர் வீசலைப் பெறலாம். இக்கதிர்வீசலை ஒரு தனிக்கற்றை ஆக்கி ஒரு அரியத்தினூடாகச் செலுத்திப் பெறப்படும் விளைவுக்கதிரை ஒரு திரையில் பார்க்கும்போது திரையில் பல கோடுகள் இருப்பதைக் காணலாம். இது 
கோட்டு நிறமாலை (Line Spectrum) எனப்படும்.
இங்கு சிவப்பு, பச்சை, ஊதாநிறக் கோடுகளைக் காணலாம்.

உறிஞ்சல் நிறமாலை
மூலக அணுக்களுக்கு சக்தியை வழங்கும் போது அவை குறித்தளவான சக்தியை உறிஞ்சி எஞ்சும் சக்திக் கதிர்ப்புக்களை அரியமொன்றினால் பகுப்புச் செய்வதன் மூலம் உறிஞ்சல் நிறமாலைகளைப் பெறலாம். இது கருமையான கோடுகளைக் கொண்டதாக இருக்கும்.
காலல் நிறமாலை/ வெளிவிடுதல் நிறமாலை
அணுக்கள் ஏற்கனவே உறிஞ்சிய சக்தியைப் பின்னர் வெளிவிடுகிறது. இச் சக்திக் கதிர்ப்புக்களை அரியமொன்றினால் பகுப்புச் செய்வதன்மூலம் காலல் நிறமாலைகளைப் பெறலாம். இது பிரகாசமான கோடுகளைக் கொண்டதாக அமையும்

Note:- 
1. ஒரு மூலகத்தின் உறிஞ்சல் நிறமாலையையும், காலல்நிறமாலையையும் 
    ஒன்று சேர்க்கும் போது தொடர் நிறமாலை ஒன்றைப் பெறலாம்.
2. இத்திருசியங்களில் கோட்டுத்திருசியங்கள் அணுக்களினது சக்தி 
    மாற்றத்தைக் குறிப்பனவாகும். இவை இலத்திரன் நிலையமைப்புப் பற்றிய 
    போதிய தகவல்களைத் தரக்கூடியது.

பட்டை நிறமாலை (Band Spectrum)
மூலக்கூறுகள் வித்தியாசமான அணுக்களைக் கொண்டிருப்பதால் இவற்றின் ஆவியின் திருசியங்கள் பல கோடுகளைக் கொண்டிருக்கும். பல கோடுகள் ஒன்று சேர்ந்தவுடன் பட்டிகைகளாக காணப்படுவதால் இவை பட்டை நிறமாலை (Band Spectrum) எனப்படும்.


No comments:

Post a Comment