Monday, July 1, 2013

கர்நாடக சங்கீதம் - சுருதி


பாட்டைத் தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேட ஒலி சுருதியெனப்படும். ஒரு இராகத்திற்கு இருக்க வேண்டிய சுரஸ்தானங்களில் எவையேனும் வேண்டிய பிராமணத்திற்கு அமையாது கூடியோ, குறைந்தோ வேறாக நிற்குமாயின் சுருதி சேராத பாடல் என்கின்றோம். இப்பாடலில் கேட்பவர்களுக்கு வெறுப்பையும்,விரக்தியையும் உண்டு பண்ணும். சுருதி, சட்சமம், பஞ்சமம் ஆகிய சுரங்களில் செயற்கையில் உண்டு பண்ணப்படுகிறது. றீட்ஸ் (Reeds) வாத்தியங்களில் ஆதார சட்சமம், மத்தியஸ்தாய் பஞ்சமம், மேல் ஸ்தாய் சட்சமம் ஆகிய ஸ்வரங்களையே சுருதிக்கு வைக்கப்படும். இதனையே பஞ்சம் சுருதி என்பர்.

இசை உலகில் சுருதிக்கு தாயகமாம் தன்மை அளிக்கப்பட்டுள்ளது. ‘சுருதி மாதா’ ‘லயம் பிதா’ என்னும் வாக்கியம் வெளிப்படுத்துகிறது. தாய் இல்லாமல் எப்படி சேய் பிறப்பதில்லையோ, அப்படியே சுருதி இல்லாமல் இசை பிறப்பதில்லை. அப்பியாச கானம் எனப்படும் ஆரம்பப் பாடகாலம் தொட்டு சுருதியுடன் சேர்ந்து பாடிப்டிழகுவோர் சிறந்த இசை ஞானிகளாவர் என்பதில் சற்று ஐயமுமில்லை. 

சுருதிக்குச் சுருதி வாத்தியங்கள் பல உபயோகிக்ப்பட்டபோதிலும் தம்புராச் சுருதியே மிகச் சிறந்ததாகும். சுத்தமாக சுருதிச் சேர்க்கப்பட்ட தம்புராவை மீட்டிக் கொண்டே இருந்தால் இவ்வுலகில் வேறெதுவுமே வேண்டியதில்லை என்பது போன்ற ஒருவகை உணர்வு உண்டாகும்.
ஹார்மோனியம் (Harmoniam) த்திலுள்ள வெள்ளைக்கட்டைகளை முறையே 1,2,3,4,5,6 கட்டைச் சுருதிகள் எனவும், கறுப்புக் கட்டைகளை முறையே  1½ , 2½ , 3½ , 4½ ,  5½ , 6½ எனவும் கொள்ளவும்.  முதலாவது வெள்ளைக் கட்டையைச் சட்சமமாக வைத்துப் பாடுவோமானால் ஒரு கட்டைச் சுருதியெனவும், இரண்டாவது வெள்ளைக் கட்டையைச் சட்சமமாக வைத்துப் பாடுவோமானால் இரண்டு கட்டைச் சுருதி எனவும் கொள்ளவும்.

சிறுவர்களும், பெண்களும் சாதாரணமாக 4 தொடக்கம் 5½ , 6 கட்டை வரையில் பாடக்கூடியவாறு குரல் வளம் அமைந்திருக்கும். வளர்ந்த ஆண்களில் சிலரால் மட்டுமே இச்சுருதியால் பாடமுடியும்.  இவர்களின் சாதாரண சுருதி ஒரு கட்டை தொடக்கம் 2, 2½ வரையிலாகும். 

ஒரு கட்டைக்கு குறைந்த சாரீர வளம் உள்ளவர்களும் உளர். கூடிய சுருதியிற் பாடுபவர்கள் திறமை மிக்கவர்களென்றோ, குறைந்த சுருதியில் பாடுபவர்கள் திறமை அற்றவர்களென்றோ பொருள் கொள்ளலாகாது. இது அவரவர் குரல் வளத்தின் இயற்கை அமைப்பையும், உடல் நிலையையும் பொறுத்ததாகும்.

சுருதியில் கட்டை என்னும் சொல் ஹார்மோனியத்தில் உள்ள கட்டைக ளையே குறிக்கும்.


No comments:

Post a Comment