Tuesday, February 26, 2013

அங்கிகளின் உடலின் ஒழுங்கமைப்பு மட்டங்கள்

நுணுக்குக்காட்டியின் உதவியுடன் தாவர, விலங்குக் கலங்களைக் கண்டறிதல்

தக்கை அடைப்பானின்  மெல்லிய வெட்டுமுகங்களை கூட்டு நுணுக்குக் காட்டியினூடு அவதானித்து அதன் அறைகளை  Robert Hooke எனும் விஞ்ஞானி கலங்கள் எனப்பெயரிட்டார்.

Matthias Schleiden
சகல தாவரங்களும் கலஙகளால் ஆக்கப்பட்டுள்ளன எனக் கூறினார்.
Theordore Schwan
விலங்குகள் யாவும் கலங்களால் ஆனவை எனும் கருத்தை முன் வைத்தார்.
Schleiden & Schwan
ஆகிய இருவரினாலும் நவீன கலக்கொள்கை விளக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

கலக்கொள்கை(Cell Theory)
1.அங்கிகளின் கட்டமைப்பினதும், தொழிற்பாட்டினதும் அடிப்படை அலகு கலமாகும்.
2.சகல அங்கிகளும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டகலங்களால் ஆனவை
3.சகல கலங்களும் முதல் உள்ள கலங்களிலிருந்தே உண்டாகின.

கலமென்பது வெறுங்கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய அமைப்பாகும்.எனவே இக்கலங்களை அவதானிப்பதற்கு நுணுக்குக்காட்டி பயன்படுத்தப்படுகின்றது.

நுணுக்குக்காட்டி(Micros cope)
வெற்றுக் கண்களுக்குப் புலப்படாத மிக நுண்ணிய அமைப்புக்களை தெளிவாகவும் உருப்பெருக்கியும் அவதானிப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணம் நுணுக்குக்காட்டி எனப்படும்.


இது பொதுவாக இரு வகைப்படும்

நுணுக்குக்காட்டியின் வகை
பயன்படுத்தும் முதல்;/ கற்றை
1.
ஒளி நுணுக்குக்காட்டி
ஒளிக்கற்றை/ வெள்ளொளி
2.
இலத்திரன் நுணுக்குக்காட்டி
அதிவேக இலத்திரன் கற்றை

பிரிவலு
இரு பொருட்களை வேறுபிரித்து அறிவதற்கு அவற்றிற்கு அவற்றிற்கு இடையே காணப்படும் மிகச் சிறிய தூரம் பிரிவலு எனப்படும்.
பிரிவலு இல்லாதவிடத்து பொருள் மங்கலாகத் தெரியும்.

ஒளி நுணுக்குக்காட்டி(Light Micros cope)
ஒளி நுணுக்குக்காட்டியின் தோற்றம்


இலத்திரன் நுணுக்குக்காட்டியின் தோற்றம்

ஒளி நுணுக்குக்காட்டியின் பிரிவலு
ஒளி நுணுக்குக்காட்டியின்  உயர் பிரிவலு 0.2µm/200nm ஆகும்.
மனிதக்கண்ணின் பிரிவலு 0.1mm/100µm ஆகும்.
எனவே ஒளி நுணுக்குக்காட்டியின் பிரிவலு மனிதக் கண்ணிலும் பார்க்க 500 மடங்கு அதிகம்.
ஒளி நுணுக்குக்காட்டியில் கட்புலனாகும் வெள்ளொளி பயன்படுத்தப்படும்.
வெள்ளொளி ஏழு நிறங்களால் ஆக்கப்பட்ட ஒளிக்கற்றைகளால் ஆக்கப்பட்டதாகும்.
குறுகிய அலை நீளங்கள் கூடிய பிரிவலுவுடையவை.
Eg:- UV Rays
       உயர் மின் அழுத்த இலத்திரன் கற்றைகள்(High Voltage Electron Beams)
இவற்றுள் ஊதா நிறக்கதிரே மிகக்குறைந்த அலை நீளம் கொண்டதாகும்.
பார்ப்பதற்காக நாம் பயன்படுத்தும் கதிரின் அலைநீளத்தின் அரைபங்கு கொண்ட பொருட்களை மட்டுமே ஒளிநுணுக்குக் காட்டியால் பிரித்தறிய முடியும். ஏனெனில், கதிரின் பயணப் பாதையை பொருள் மறைப்பதே இதற்கான காரணமாகும்.
ஒளிக்கதிரைப் பயன்படுத்தி ஆகக்குறைந்தது 200nm விட்டம் கொண்ட பொருள்களை மட்டுமே எம்மால் பார்க்க முடியும்.
ஊதா நிறத்தின் அலைநீளம் 400nm ஆகக் காணப்படுவதே இதற்கான காரணமாகும்.

ஒளி நுணுக்குக்காட்டியின் மூலம் கலத்தை கூட்டமாக ஓரளவு அவதானிக்க முடியும் ,ஆனால் இலத்திரன் நுணுக்குக்காட்டியைப் பயன்படுத்தி கலத்தின் நுணுக்கமான அமைப்புக்களைத் தெளிவாக அவதானிக்க முடியும்.

இலத்திரன் நுணுக்குக்காட்டியின் பிரிவலு
இலத்திரன் கதிரின் அலைநீளம் மிகக்குறுகியது. ஆகையால், அதனை பயன்படுத்தி 0.5nm அளவுடைய நுண்ணிய பொருட்களையும் உருப்பெருக்கி அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஒளி நுணுக்குக்காட்டிக்கும் இலத்திரன் நுணக்குக்காட்டிக்கும் இடையிலான வேறுபாடுகள்
 ஒளி நுணுக்குக்காட்டி  
 இலத்திரன் நுணுக்குக்காட்டி
1. கட்புலனாகும் ஒளி பயன்படுத்தப்படும்.
1. இலத்திரன் கற்றைகள் பயன்படுத்தப்படும்.
2. பிரிவலு 0.2µm
2. பிரிவலு 0.5nm
3. கண்ணாடி வில்லைகள் பயன்படுத்தப்படும்.
3. காந்த வில்லைகள் பயன்படுத்தப்படும்.
4. இயற்கையான நிறம் அவதானிக்கப்பட முடியும்.
4. விம்பம் கறுப்பு வெள்ளை.
5. மாதிரிப் பொருட்கள் உயிருள்ள or உயிரற்ற மாதிரிப்பொருட்கள்.
5. மாதிரிப்பொருள் உயிரற்ற நீரிழக்கச் செய்யப்பட்ட ஒப்பீட்டுரீதியில் சிறியது.
6. வெற்றிடம் அவசியம் இல்லை.
6. உயர் வெற்றிடம் அவசியம்.
7. மாதிரிப்பொருள் கண்ணாடி வழுக்கியின் மீது வைக்கப்படும்.
7. மாதிரிப்பொருள் வெற்றிடத்தினுள் ஒரு சிறிய Copper Grid  இல் வைக்கப்படும்.
8. உருப்பெருக்கம் >X 1000 மேல்(1500-2000)
8. உருப்பெருக்கம் X 5000000

கலங்களின் வகைகள்
1. பக்ற்ரியாக்கலம்
2. தாவரக்கலம்
3. விலங்குக்கலம்

கலங்களின் ஒளி நுணுக்குக்காட்டித் தோற்றம்
பக்ற்ரியாக்கலங்கள்  - Eg :- தயிர்க்கரைசல்
தாவரக்கலங்கள்              -  Eg :- மேற்றோல் உரி ,வெங்காய உரி
விலங்குக்கலங்கள்         Eg :- கன்னக்கலங்கள்

கலங்களின் இலத்திரன் நுணுக்குக்காட்டித் தோற்றம்

பக்ற்ரியாக்கலம்
புறோக்கரியோட்டா கலவமைப்புடையது.
இவற்றின் கலச்சுவர் மியூக்கோபெப்ரைட்டு அல்லது பெப்ரிடோகிளைக்கோன் அல்லது மியூரின் என்பவற்றினால் ஆக்கப்பட்டது.
திட்டமான கரு கிடையாது. ஆனால் பாரம்பரிய பதார்த்தம் கருமென்சவ்வு அற்ற வட்ட DNA மூலக்கூறுகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.


தாவரக்கலம்




தாவர இலையின் மேற்றோல் உரியை ஒளிநுணுக்குக்காட்டியினூடாக உருப்பெருக்கி அவதானித்தல்
1.தாவர இலையின் கீழ்ப்புற மேற்றோலில் இருந்து மெல்லிய மெல்லிய   
   மேற்றோலுரியைப் பெற்றுக் கொள்க.
2. அம்மேற்றோலுரியை மணிக்கூட்டுக் கண்ணாடியிலுள்ள நீரில்இடுக.
3. இம்மேற்றோலுரியை நீர்த்துளியுடன் சேர்த்து தூரிகையினால் எடுத்து 
    வழுக்கியில் ஏற்றுக.
4. வளி சிறைப்படாத வகையில் மூடித்துண்டால் மேற்றோலுரியை மூடுக.
5. பின்னர் நுணுக்குக் காட்டியின் தாழிவலுவின் கீழ் அவதானிக்குக.
6. பின் அம்மேற்றோலுரியை உயர்வலுவின் கீழ் அவதானிக்குக.
7. இறுதியில் அவதானித்த பகுதிகளை வரிப்படத்தில் குறிக்குக.

விலங்குக்கலம்




வாய்க்குழியின் மேற்றோல் பகுதியில் உள்ள கன்னக்கலங்களை ஒளிநுணுக்குக்காட்டியினூடாக உருப்பெருக்கி அவதானித்தல்
உங்கள் வாய்க்குழியின் மேற்பகுதியில் உள்ள கன்னப்பகுதியை யோக்கட் கரண்டியினால் சுரண்டுவதன் மூலம் கன்னக்கலங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதனைக் கண்ணாடி வழுக்கியில் ஏற்றி ஒளிநுணுக்குக்காட்டியின் தாழ்வலுவின் கீழும் உயர்வலுவின் கீழும் அவதானிக்கும் போது கன்னக்கலங்கள் மத்தியில் கோளவடிவான கருவையும் அதனைச்சூழ சிறுமணியுருவான அமைப்புக்களைக் கொண்டதாகவும் காட்சி தரும்.
கலத்தினுள் காணப்படும் கருவும் சிறுமணியுருவான அமைப்புக்களும் ஒருங்கே முதலுரு எனப்படும்.
கலமுதலுருவைச் சுற்றிவர முதலுருமென்சவ்வு/கலமென்சவ்வு காணப்படும்.


தாவரக்கலத்திற்கும் விலங்குக்கலத்திற்கும் இடையிலான வேறுபாடுகள்

 தாவரக்கலம்
 விலங்குக்கலம்
 1. பச்சையவுருமணியைக்   
   கொண்டவை.
 1. பச்சையவுருமணியற்றவை.
 2. கலச்சுவரைக் கொண்டவை.
 2. கலச்சுவர் அற்றவை.
 3. புன்மையத்தி அற்றவை.
 3. புன்மையத்தி கொண்டவை.
 4. கலத்தின் வெளிப்புற எல்லை  
   கலச்சுவர்
 4. கலத்தின் வெளிப்புற எல்லை 
   முதலுரு மென்சவ்வு
 5. கரு ஓரப்பகுதிக்கு 
   தள்ளப்பட்டுக் காணப்படும்.
 5. கரு மத்தியில் காணப்படும்.

ஒளிநுணுக்குக்காட்டியினூடாக அவதானிக்கும் போது தெளிவாகத் தென்படும் தாவர, விலங்குக் கலப்பாகங்கள்

கலச்சுவரின் அமைப்பு

தாவரக்கலத்தின் வெளிப்புற எல்லையாகக் காணப்படுவதுடன், விலங்குக் கலங்களில் காணப்படுவதில்லை.
வெவ்வேறு அங்கிக் கூட்டங்களின்  கலச்சுவர் வெவ்வேறு பதார்த்தங்களினால் ஆக்கப்பட்டுள்ளன.
1. தாவரக் கலச்சுவர்           - செலுலோசு, அரைச்செலுலோசு, பெக்ரின்
2. பக்ற்ரீரியா கலச்சுவர்   - மியூரின்
3. பங்கசுக் கலச்சுவர்          - கைற்றீன்

முதலுரு மென்சவ்வின் அமைப்பு
விலங்குக் கலத்தின் வெளிப்புற எல்லையாகவும், தாவரக்கலத்தில் கலச்சுவருக்கு உட்புறமாகவும் காணப்படுகின்றது.
இது புரதம், காபோவைதரேற்று, இலிப்பிட்டு என்பனவற்றினால் ஆக்கப்பட்டது.

கலப்புன்னங்கங்கள்
கலத்தினுள் நடைபெறும் குறித்த தொழில்களுக்காக இசைவாக்கமடைந்துள்ள அமைப்புக்களே கலப்புன்னங்கங்கள் எனப்படும்.
இனி கலப்புன்னங்கங்கள் தொடர்பாக சற்று விரிவாக நோக்குவோமாயின்

கரு
இது கலத்தினுள் நடைபெறும் அனைத்து உயிர்ச்செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும் அமைப்பாடும்.
கலத்தினுள் காணப்படும் மிகப்பெரிய புன்னங்கமாகும்.
இது கருமென்சவ்வினால் .(இரட்டை மென்சவ்வினால் சூழப்பட்டது.) சூழப்பட்டிருப்பதுடன் நிறமூர்த்தங்களையும் புன்கருவையும் கொண்டிருக்கும்.
கருவினுள் காணப்படும் நிறமூர்த்த இழைகள் ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு பாரம்பரிய இயல்புகள் கடத்தப்படுவதற்கு இன்றியமையாதவை ஆகும்.


பச்சையவுருமணிகள்
இது தாவரக்கலங்களில் மட்டும் காணப்படும்.
இதன் உட்பகுதியில் உருமணி நிறப்பொருட்களாக குளோரோபில் -a , குளோரோபில் - b, கரட்டீன்,  சாந்தோபில் போன்றவை காணப்படும்
உருமணிநிறப்பொருட்கள்
நிறம்
குளோரோபில் - a
பச்சை
குளோரோபில்; - b
பச்சை
கரட்டீன்
மஞ்சள்
சாந்தோபில்
செம்மஞ்சள்
ஒளித்தொகுப்பின்போது ஒளிச்சக்தியை உறிஞ்சி சேதன உணவைத் தயாரிப்பது இப்பகுதியாகும்.
இவையும் இரட்டை மென்சவ்வினால சூழப்பட்ட புன்னங்கமாகும்.

இழைமணி
கலத்தில் நடைபெறும் எல்லா உயிர்ச் செயன்முறைகளுக்கும் அவசியமான சக்தியை வழங்குவதற்கான பல தாக்கங்கள் (கலச்சுவாசம்) இழைமணி யிலேயே நடைபெறுகின்றது.
இழைமணியும் இரட்டை மென்சவ்வினால் சூழப்பட்டது. மேலும் அகமென்சவ்வு புடைத்து உள்ளக மடிப்படைந்து காணப்படுவதனால் உள்ளக மேற்பரப்பு அதிகரித்துள்ளது.

கொல்கியுடல்கள்/ கொல்கி உபகரணம்/ கொல்கிச்சிக்கல்
கருவைக் கொண்டுள்ள எல்லாக்கலங்களிலும் இவை காணப்படும்.
ஒற்றை மென்சவ்வினால் சூழப்பட்ட உறை போன்ற அமைப்பாகக் காணப்படும்.
இவை அழுத்தமான அகமுதலுருச் சிறுவலையில் (SER) இருந்து வெட்டிவிடப்பட்ட துண்டுகளாகும்.
கலத்துக்குத் தேவையான பல்வேறு சுரப்புகளை உற்பத்தி செய்தல், பதார்த்தங்களைக் கொண்டு செல்லல், சுரத்தல் போன்ற தொழில்களை இப்புன்னங்கம் புரிகின்றது.

அகமுதலுருச் சிறுவலை/ அகக்கலவுருச் சிறுவலை
அகமுதலுருச் சிறுவலை இரு வகைப்படும்

1. அழுத்தமான அகமுதலுருச் சிறுவலை (SER) – மேற்பரப்பில் Ribosome
    அற்றவை
2. அழுத்தமற்ற அகமுதலுருச் சிறுவலை (RER) – மேற்பரப்பில் Ribosome
    கொண்டவை

கருவைக் கொண்டுள்ள எல்லாக்கலங்களிலும் காணப்படும்.
இது குழியவுருவில் காணப்படும். மென்சவ்வுகளினால் ஆக்கப்பட்ட வலையமைப்பு ஆகும்.
இம் மென்சவ்வுகளின் Ribosomes  காணப்படும்  இதனால் அகக்கலவுருச் சிறுவலையின் மேற்பரப்பு அழுத்தமற்றுக் காணப்படும்.
இவ் Ribosomes இல் காணப்படும் RNA புரதத்தொகுப்புக்கு அவசியமாகும். இவை கருவின் வெளிப்புறத்தே காணப்படும் மென்சவ்வுடன் பிணைக்கப் பட்டிருக்கும்.

இறைபோசோம்கள்
இறைபோசோம்கள் புரதத்தொகுப்பு நடைபெறும் மையங்களாகும்.
இவை ஒரு பெரிய உப அலகினாலும், ஒரு சிறிய உப அலகினாலும் ஆக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் இணைந்து ஒரு சிக்கல் தோன்றும்.


கட்டமைப்பு, தொழிற்பாடு ஆகியவற்றினடிப்படையில் தாவர, விலங்கு இழையங்களின் பல்வகைமையை அறிந்துகொள்ளல்

தாவர இழையங்கள்

ஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது தொழில்களுக்காகச் சிறத்தல் அடைந்த ஒரே உற்பத்தியுடைய பௌதீகத் தொடர்புகளைக் கொண்ட கலங்களின் கூட்டம் இழையம் எனப்படும்.
இழையங்கள் தோற்றுவிக்கப்படல் அங்கியின் வினைத்திறன் அதிகரிப்புக்கு உதவும்.

பிரியிழையம்
உயிர்ப்பாகப் பிரிகையடைந்து புதிய கலங்களைத் தோற்றுவிக்கும் வியத்தமடையாத கலங்களின் கூட்டம் பிரியிழையம் எனப்படும்.
நிலையிழையம்
ஒரு குறிப்பிட்ட தொழில்களை நடாத்துவதற்கு பிரியிழையக் கலங்களில் இருந்து வியத்தமடைந்துள்ள கலங்களின் கூட்டம் நிலையிழையம் எனப்படும்.
இவை பொதுவாக பிரியுமாற்றலை இழந்துள்ளது. இருப்பினும் சிலவேளைகளில் மீண்டும் பிரியுமாற்றலைப் பெறும்.
அங்கிகளின் வளர்ச்சியின் போது நிலையிழையங்கள் தோற்றுவிக்கப்படும். (தோற்றுவிக்கப்படும்)
ஒரு தனிக்கலத்தில் ஆரம்பித்து நடைபெறும் பல்கல அங்கிகளின் வளர்ச்சி மூன்று அவத்தைகளாகப் பிரிக்கப்படும்.

1. கலப்பிரிவு
2. கலநீட்சி
3. கலவியத்தம்


கலப்பிரிவு
இழையுருப்பிரிவினதும் கலப்பிரிவினதும் (குழியவுருப்பிரிவு) விளைவாக கல எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பு கலப்பிரிவு எனப்படும்.

கலநீட்சி/ கலவிரிவு
பதார்த்தங்களின் தொகுப்பின் விளைவாக ஏற்படும் மீளமுடியாத கலப்பருமன் அதிகரிப்பு கலநீட்சி/ கலவிரிவு எனப்படும்.

கலவியத்தம்
ஒரு குறித்த தொழிலைச் செய்வதற்காக கலங்களோ அல்லது இழையங்களோ சிறத்தலடையும் செயன்முறை கலவியத்தம் எனப்படும்.

அங்கியின் வளர்ச்சியும் வியத்தமும் கலங்களில் DNA இல் காணப்படும் பிறப்புரிமைச் செய்தியினால் கட்டுப்படுத்தப்படும்.
இரு நிலையிழையத்தில் உள்ள வியத்தமடைந்த கலங்கள் ஒரு வகைக்குரியதாகக் காணப்படுமாயின் எளிய நிலையங்கள் எனப்படும்.
Eg:- புடைக்கலவிழையம்
       ஒட்டுக்கலவிழையம்
       வல்லுருக்கலவிழையம்
புடைக்கலவிழையம் (Parenchyma)


கலங்கள் உயிர் உள்ளது.
கோளவடிவானது அல்லது ஒத்தபரிமாணமுடைய கலங்கள்
சிலவேளைகளில் நீண்ட கலங்கள்
முதற்சுவர் உண்டு (பொதுவாக துணைச்சுவர் இல்லை)
செலுலோசுக் கலச்சுவர் அல்லது கலச்சுவர் Cellulose, Hemi Cellulose, Pectin ஆகியவற்றால் ஆக்கப்பட்டது.
கலத்திடைவெளிகள் உண்டு.

பெரிய புன்வெற்றிடத்தைக் கொண்டது.
கலங்கள் குறைந்தளவு வியத்தமடைந்தது.

தொழில்கள்

1. உணவு சேமிப்பு
2. பூண்டுத்தாவரங்களில் தாங்குபலம்.
3. கலத்திடைவெளிகள் வாயுப்பரிமாற்றத்திற்கு உதவும்.
4. கலங்களினூடாக அல்லது கலச்சுவரினூடாக பதார்த்தங்களின் கடத்தல்.
5.அதிகளவு சிறத்தல் அடைந்த கலங்களுக்கிடையில் நிரப்புகின்ற இழைய  
   மாகக் காணப்படும்.
Eg:- கிடை/ மையவிழையம்
       மேற்பட்டை
       மையவிழையக்கதிர் (கலன்கட்டுக்களுக்கு இடைப்பட்ட பகுதி)
       காழ்
       உரியம்

சிறத்தலடைந்த புடைக்கலவிழையம்
சில புடைக்கலவிழையக்கலங்கள் திரிபடைந்து அதிகளவு சிறத்தலடைந்து தாவரத்தின் சில பாகங்களில் காணப்படும்.
1. மேற்றோல்
2. இலைநடுவிழையம்
3. அகத்தோல்
4. பரிவட்டவுறை
5. காற்றிழையம்/ காற்றுக்கலவிழையம்ää காற்றுப்புடைக்கலவிழையம்.

ஒட்டுக்கலவிழையம்(Collenchyma)
கலங்கள் உயிர் உள்ளது
சமனற்ற முறையில் தடித்த முதற்சுவர் உண்டு.
Cellulose கலச்சுவர் மூலைகளில் அதிகமாகத் தடிப்படைந்திருக்கும்.
கலச்சுவர் Cellulose, Hemi Cellulose, Pectin  இனால் ஆக்கப்பட்டது.
கலச்சுவரில் குழிகள் காணப்படும்.
குறுக்கு வெட்டுமுகத்தில் அறுகோணவடிவான/ பல்கோணவடிவான நீண்ட கலங்கள் முனைச்சுவர் பெரும்பாலும் சரிவானதும் அல்லது கூம்பும் முனைச்சுவரைக் கொண்டது.
கலத்திடை வெளி நன்கு ஒடுக்கப்பட்டுள்ளது அல்லது தெளிவற்றது.

தொழில்
பொறிமுறை ஆதாரம் அல்லது தாங்கு பலம் அல்லது ஆதாரம் வழங்குகிறது.
(இது மாத்திரமே உயிர் உள்ள தாங்குமிழையம்)

பரம்பல்
பூக்கும் தாவரங்களின் இருவித்திலைத் தாவரங்களில் மாத்திரம் உண்டு. நிலமேல் பகுதிகளிலே உண்டு. வேர்களில் காணப்படமாட்டாது.
Eg:- இளம் இருவித்திலைத் தண்டில் மேற்பட்டையின் வெளிப்பகுதி
       இலைக்காம்பு
       பூக்காம்பின் சுற்றுப்புறம்
       இருவித்திலை இலைகளின் நடு நரம்புக்கு மேலும் கீழும்

வல்லுருக்கலவிழையம் (Sclerenchyma)

இறந்த கலங்களால் ஆக்கப்பட்டது.
தடித்த இலிக்னின் ஏற்றப்பட்ட கலச்சுவரைக் கொண்டது.
இழுவைக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய தன்மை கொண்டவை.
இலிக்னின் படிவு காணப்படுவதனால் உறுதியானவை.
தடிப்பற்ற கலச்சுவர் பிரதேசங்களினூடாக மற்றைய கலங்களுடன் தொடர்பு பட்டிருக்கும்.

தொழில்
ஆதாரம், தாங்குபலம்

வல்லுருக்கலவிழையம் இருவகைக் கலங்களைக் கொண்டது.
 1. நார்கள்
 2. வல்லுருக்கள்

தனித்தனியாக அமைந்துள்ள இலிக்னின் படிவாலான உறுதியான கலங்கள் கற்கலங்கள், வல்லுருக்கள் எனப்படும்.
Eg:- தேங்காய், பனை, கமுகு போன்றவற்றின் இடைக்கனியம் - நார்கள்
     ஆப்பிள், பேரிக்காய் (பெயர்ஸ்) பழத்தில் மணல் போன்ற தன்மை ஏற்படுவது
     இவற்றின்  காரணத்தினாலேயே ஆகும். - கற்கலங்கள்/ வல்லுருக்கள்

சிக்கலான நிலையிழையம்
ஒன்றுக்கு மேற்பட்ட வகையான வியத்தமடைந்த கலவகைகளினால் ஆக்கப்பட்ட இழையம்

 1. காழ் (Xylem)
 2. உரியம் (Phloem)

காழ் இழையம் (Xylem Tissue)

இது உயிருள்ள கலங்கள்ää உயிரற்ற கலங்களின் ஒரு கலவை.
இது நான்கு வகைக் கலக் கூறுகளைக் கொண்டது.

காழ்க்கலன்          - உயிரற்றது
குழற்போலி          - உயிரற்றது
காழ்ப்புடைக்கலவிழையம்  - உயிருள்ளது
காழ்நார்                  - உயிரற்றது

தொழில்
தாவரங்களில் நீரையும், கனியுப்புக்களையும் கடத்தும் அத்துடன் தாங்கும் தொழிலும் புரிகின்றது.

காழ்க்கலன் (Xylem Vessels)
நீண்ட கலங்கள் முனைக்குமுனை அடுக்கப்பட்ட நீண்ட உருளை உருவான அமைப்பு.
கலங்கள் இறந்தது.
கலச்சுவர் Cellulose, Hemi Cellulose, Pectin  உடன் துணைச் சுவர்ப்பதார்த்தமாக Lignin  ஆனால் தடிப்படைந்திருக்கும்.
முனைச் சுவர் அழிவதனால் நீண்ட நிரலான குழாயாக மாறும் இதன் ஒவ்வொரு கலப்பகுதியும் காழ்க்கலன் மூலகம் / காழ்க்கலன் கூறு எனப்படும்.
இவற்றின் கலசு;சுவர்களில் வளையங்களாக அல்லது சுருளியுருவான Lignin படிவு காணப்படும்.
பலகலங்கள் ஒன்றிணைந்து நீண்ட குழாய்களை உருவாக்கும்.

பரம்பல்
வித்துமூடியுளிகளில் (Angiosperms) காணப்படும்.

தொழில்கள்
1. நீர், கனியுப்புக் கடத்தல்.
2. தாங்கும் தொழிலையும் புரிகின்றது.

குழற்போலி (Tracheids)
நீண்ட இருமுனை கூம்பிய தனிக்கலங்கள்
கலங்கள் இறந்தது.
கலச்சுவர்Cellulose, Hemi Cellulose, Pectin  உடன் துணைச் சுவர்ப்பதார்த்தமாக Lignin ஆனால் தடிப்படைந்திருக்கும்.

பரம்பல்
வித்துமூடியுலிகளில் (Gymnosperms) காணப்படும்.

தொழில்கள்
1. நீர், கனியுப்புக் கடத்தல்.
2. தாங்கும் தொழிலையும் புரிகின்றது.

காழ் நார் (Xylem Fibres)
இது வல்லுருக்கலவிழைய நாரை பெருமளவில் ஒத்தது.
நீண்ட இருமுனை கூம்பிய கலங்கள்.
கலங்கள் இறந்தது.
Lignin ஏற்றப்பட்டது.

தொழில்
 1. மேலதீக உறுதி கிடைக்கும்

காழ்ப்புடைக்கலவிழையம் (Xylem Parenchyma)
காழ் இழையங்களில் ஒரேயொரு உயிருள்ள கலவகையாகும்.
புடைக்கலவிழையக் கலங்களை ஒத்தது.

தொழில்
 1. உணவு சேமிப்பு

உரிய இழையம்(Phloem Tissue)
இது பெருமளவு உயிருள்ள கூறுகளையும் சிறிதளவு இறந்த கூறுகளையும் கொண்டது. 

நெய்யரிக்குழாய் / நெய்யரிக்கலம் - உயிருள்ளது.
தோழமைக்கலம் / துணைக்கலம் - உயிருள்ளது.
உரியப்புடைக்கலவிழையம் - உயிருள்ளது.
உரிய நார்                         - உயிரற்றது.

தொழில்
சேதன உணவுக்கடத்த்ல்.

நெய்யரிக்குழாய். (Sieve tube)
மிக அதிகளவு சிறத்தல் அடைந்த உரிய கலங்கள்.
நீண்ட குழாய் உருவான அமைப்புக்கள்.
முனைக்கு முனை நீண்ட கலங்கள் அடுக்கப்பட்டு இணைவதன் மூலம் நெய்யரிக்குழாய் தோன்றும்.
உயிருள்ள கலங்கள் ஆயினும் கருவை கொண்டிருப்பதில்லை.

தொழில்
இலைகளில் தயாரிக்கப்பட்ட சேதன உணவு இவற்றினூடாகவே தாவரத்தின் ஏனைய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

தோழமைக்கலம் (Compamon Cell)
உயிருள்ள கலங்கள்
இவற்றின் கலச்சுவர் Cellulose, Hemi Cellulose, Pectinயினால் ஆக்கப்பட்டது.
நீண்ட ஒடுங்கிய கலங்கள் அடத்தியான குழியவுருவையும் மத்தியில் அமைந்த பெரிய கருவையும் கொண்டது. அதிக எண்ணிக்கையில் இழைமணிகள் உண்டு.
சில தோழமைக்கலங்கள் உள் வளர்ச்சிகளை கொண்டிருக்கும். இவை இடம்மாற்றும் கலங்கள் எனப்படும். (Transfer Cell)
இவை அண்மையிலுள்ள நெய்யரிக்கலங்கள் உடன் இணைந்து தொழிற்பாட்டு அலகை உருவாக்கும்.

தொழில்
நெய்யரிக்குழாயுடன் சேர்ந்து சேதன உணவு கடத்தலில் பங்கெடுக்கும் அல்லது உரிய சுமையேற்றம், உரிய சுமையிறக்கத்தில் பங்கெடுக்கும்.


உரிய புடைக்கலவிழையம் (Pholem Paranchyma)

புடைக்கலவிழையத்தின் அதே அமைப்புடையது. ஆனால் கலங்கள் பொதுவாக நீண்டது.
இருவித்திலை தாவரங்களில் உண்டு ஆனால் ஒரு வித்திலை தாவரங்களில் இல்லை.

தொழில்
உணவு சேமிப்பு

உரியநார் (Pholem Fibres)
இவை முற்றிலும் வல்லுருக்கலவிழைய நாரினை ஒத்தது.
ஒரு வித்திலை தாவரங்களில் இல்லை ஆனால் இரு வித்திலை தாவரங்களில் உண்டு.

தொழில்
புற விசைகளில் இருந்து அல்லது அமுக்கத்தில் இருந்து உரியத்தின் கூறுகளை பாதுகாத்தல். (புறவிசைகளுக்கு ஈடு கொடுக்க உதவும்).

காழ் இழையத்தினதும் உரிய இழையத்தினதும் தொழில்கள்

காழ்க்கலன்         - நீர், கனியுப்பு கடத்தல்.
குழற்போலி         - நீர், கனியுப்பு கடத்தல்;.
காழ்ப்புடைக்கலவிழையம் - உணவு சேமிப்பு.
காழ்நார்                 - தாங்கு பலம் அல்லது பொறிமுறை ஆதாரம்.

நெய்யரிக்குழாய் / நெய்யரிக்கலம் - சேதன உணவு கடத்தல்.
தோழமைக்கலம் /துணைக்கலம்  - உரிய சுமையேற்றம், உரிய சுமையிறக்கம்.
உரிய புடைக்கலவிழயம்        - உணவு சேமிப்பு.
உரிய நார்                    - தாங்கு பலம் அல்லது பொறிமுறை ஆதாரம்.


விலங்கு இழையங்கள். (Animal Tissues)
பல்கல விலங்குகளின் உடலினுள் கலங்கள் இழையங்களாக ஒழுங்கமைந்துள்ளன.

1. உயிரின் ஒழுங்காக்கற் படிநிலைகள் பின்வருமாறு அமையும்.

2. உயிரின் ஒழுங்காக்கற் படிநிலையில்
  1. ஒவ்வொரு படியும் அதற்கு முந்திய படியில் இருந்து தோன்றும்.
  2. ஒவ்வொரு படியும் தனக்கெனச் சிறப்பான இயல்புகளைக் கொண்டிருக்கும்.
  3. ஒவ்வொரு படியும் அதற்கு முந்திய படிநிலையை விடச்சிக்கலானது.

3. முளைய விருத்தியின் போது நிகழும் புன்னுதிரனாதல் செயற்பாட்டின்  
    மூலம் மூன்று மூலவுயிர்ப்படைகள் உருவாக்கப்படும்.
  1. புறத்தோற்படை
  2. இடைத்தோற்படை
  3. அகத்தோற்படை

4. ஒரு இழையத்தை ஆக்குகின்ற கலங்கள் யாவும் குறித்த ஏதாவது ஒரு  
   மூலவுயிர்ப்படையில் இருந்து உருவாக்கப்படும்.

5. மனிதனில் பின்வரும் நான்கு வகை இழையங்கள் உண்டு.

           இழையம்                       உற்பத்தி
  1. மேலணி இழையம் - புறத்தோற்படை
  2. தொடுப்பிழையம் - இடைத்தோற்படை
  3. தசையிழையம் - இடைத்தோற்படை
  4. நரம்பிழையம் - புறத்தோற்படை

மேலனி இழையம்(Epithelium Tissues)


உடலின் வெளிமேற்பரப்பு, உள்மேற்பரப்பு, குழிகள், குழாய்கள் போன்ற வற்றைப் போர்த்திக் காணப்படும் இழையம் மேலனி இழையம் எனப்படும்.
புறத்தோற்படை/ இடைத்தோற்படை/ அகத்தோற்படையில் இருந்து உருவா க்கப்படும்.
குறித்த இடத்தில் காணப்படும் மேலனி இழையம் ஏதாவது ஒரு மூலவுயிர் ப்படையில் இருந்து மாத்திரம் உருவாக்கப்படும்.

மேலணி இழையத்தின் வகைகள்
கலத்தின் வடிவத்தில் கட்டமைப்பின் அடிப்படையில்
 1. செதில் மேலணி/ எளிய மேலணி
 2. செவ்வகத்திண்ம மேலணி
 3. கம்ப மேலணி
 4. பிசிர் கொண்ட மேலணி

தொழிலின் அடிப்படையில்
 1. மூடுமேலணி - உடற்பாகங்களை மூடியிருக்கும்
 2. சுரப்பு மேலணி - பதார்த்தங்களைச் சுரக்கும்
 3. புலன் மேலணி - தூண்டல்களை உணரும்.

எளிய செதில் மேலணி
அடித்தள மென்சவ்வின் மீது ஓரு கலப்படையில் செவ்வக வடிவான கலங்கள் அடுக்கப்பட்டிருக்கும்.

காணப்படும் இடங்கள்
ஈரல், சதையீ, தைரொயிட் சுரப்பி, கெல்லேயின் இறங்கு புயம் தவிர்ந்த பாகங்கள், ஏனைய சிறுநீர் அகத்தியின் பாகங்கள், சேர்க்கும் கான், உமிழ் நீர்ச்சுரப்பிகள், வியர்வைச் சுரப்பிக்கான்

எளிய கம்ப மேலணி

அடித்தள மென்சவ்வின் மீது கம்பவடிவான கலங்கள் ஓரு கலப்படையில் அடுக்கப்பட்டிருக்கும்.

காணப்படும் இடங்கள்
இரப்பை தொடக்கம் நேர்குடல் வரையான உணவுக்கால்வாயின் பாகங்கள்
Note :- சடைமுளைகளில் உள்ள கம்ப மேலணிக் கலங்களின் சுயாதீன
            மேற்பரப்பில் தூற்று அருகுகள்/ நுண்சடைமுளைகள் காணப்படும்.

பிசிர் கொண்ட எளிய கம்ப மேலணி
அடித்தள மென்சவ்வின் மீது கம்பவடிவான கலங்கள் காணப்படும்.
இக்கலங்களின் சுயாதீன மேற்பரப்பில் பிசிர்கள் காணப்படும். இக்கலங்களுக் கிடையே பிசிர்கள் அற்ற கெண்டிக்கலங்கள் காணப்படும்.
கெண்டிக்கலங்கள் - சீதத்தைச் சுரக்கும்

காணப்படும் இடங்கள்
பலோப்பியன் குழாய், சுவாசக்குழாய்

போலிப்படை கொண்ட மேலணி
கலங்களின் உயரம் வேறுபடும். எனவே அவை வெவ்வேறு படைகளில் இருப்பது போன்று தோற்றமளிக்கும்.
எல்லாக்கலங்களும் அடித்தள மென்சவ்வின் மீது அடுக்கப்பட்டிருக்கும். எனினும் எல்லாக் கலங்களுக்கும் சுயாதீன மேற்பரப்பு காணப்படமாட்டாது.

காணப்படும் இடங்கள்
சிறுநீர்வழி


பிசிர் கொண்ட போலிப்படை மேலணி
போலிப்படை கொண்ட மேலணியை ஒத்தது. எனினும் சுயாதீன விளிம்புகளில் பிசிர்கள் காணப்படும். இடையிடையே பிசிர்கள் அற்ற கெண்டிக்கலங்கள் காணப்படும்.

காணப்படும் இடங்கள்
வாதனாளி

கூட்டு மேலணி
அடித்தள மென்சவ்வின்மீது பல படைகளில் கலங்கள் அடுக்கப்பட்டிருக்கும்.
இரு வகைப்படும்
 1. படை கொண்ட மேலணி
 2. நிலைமாறும் மேலணி/ கடப்பு மேலணி

படை கொண்ட மேலணி
அடித்தள மென்சவ்வின் மீது பல படைகளில் கலங்கள் அடுக்கப்பட்டிருக்கும். அடித்தளத்தில் உள்ள கலங்கள் மாத்திரமே அடித்தள மென்சவ்வுடன் தொடுகையுறும்.
கலப்படைகள் ஓன்றுக்கொன்று சாமாந்தரமாக அடுக்கப்பட்டிருக்கும்.
அடித்தள மென்சவ்வுடன் தொடுகையுறும் கலங்கள் கம்பவடிவில் காணப்படும். மேல்நோக்கிச் செல்லும் போது கலங்கள் படிப்படியாகத் தட்டையாகும். இம்மேலணி அதி வெளிப்புறத்தில் செதில்மேலணிக்கலங்கள் காணப்படும்
இரு வகைப்படும்.
 1. கெரற்றின் ஏற்றப்பட்டது/ கொம்புருவாக்கப்பட்டது.
 2. கெரற்றின் ஏற்றப்படாதது/ கொம்புருவாக்கப்படாதது.

கெரற்றின் ஏற்றப்பட்ட மேலணி
இம்மேலணி அதிவெளிப்புறமாகக் காணப்படும் இடங்களில் கெரற்றின் புரதம் சேர்க்கப்பட்டிருக்கும். எனவே அதி வெளிப்புறமாகக் காணப்படும்.
கலங்கள் இறந்தவை

காணப்படும் இடங்கள்
மேற்றோல், நகம், மயிர்கள்
கெரற்றின் ஏற்றப்படாத மேலணி
கலங்களில் கெரற்றின் புரதம் இல்லை எனவே இம்மேலணியின் எல்லாக்கலங்களும் உயிருள்ளவை.

காணப்படும் இடங்கள்
வாய்க்குழி மேலணி, தொண்டை, களத்தின் முன்பகுதி, குத வழி, யோனி வழி, பிணிக்கை

நிலைமாறும் மேலணி/ கடப்பு மேலணி
மூன்று/ நான்கு படைகளில் கலங்கள் அடுக்கப்பட்டிருக்கும்.
எல்லாக்கலங்களும் ஒரே வடிவானவை/ பேரிக்காய் வடிவம்.
இம்மேலணி இழுவைக்குட்படும் போது கலங்களின் உயரம் மாற்றமடையும்.
நச்சுத் தன்மையைத் தாங்கக் கூடியவை.
கனவளவு கூடிக்குறையும் இடங்களில் காணப்படும்.

காணப்படும் இடங்கள்
சிறுநீர்ப்பை, சிறுநீரக இடுப்பு, சிறுநீர்வழி

தொடுப்பிழையம்
இவை பின்வரும் பகுதிகளைக்கொண்டது
 1. ஐதான தொடுப்பிழையம் Eg:- சிற்றிடைவிழையம்
 2. கொழுப்பிழையம்/ அடிப்போசு இழையம்
 3. அடர்த்தியான தொடுப்பிழையம்
   1. வெண்ணார்த் தொடுப்பிழையம்
   2. மஞ்சள்நார்த் தொடுப்பிழையம்

நரம்பிழையம்

நரம்புக்கலங்களினால் (நியூரோன்கள்) நரம்பிழையம் ஆக்கப்பட்டுள்ளது.
இவை புலன்கலங்களில் இருந்து கணத்தாக்கங்களைப் பெற்று அவற்றை விளைவுகாட்டும் அங்கங்களுக்குச் செலுத்துகின்றன.
புலனங்கங்கள் - கண், காது, மூக்கு, நாக்கு, தோல்
விளைவு காட்டிகள் - தசைகள், சுரப்பிகள்
இவை கணத்தாக்கங்களைக் கடத்த ஏற்றவாறு சிறத்தலடைந்துள்ளன.

என்பிழையம்
இரு வகைப்படும்
1. ஐதான என்பிழையம்
2. அடர்த்தியான என்பிழையம்

கசியிழையம்
மூன்று வகைப்படும்.
1. பளிங்குருக் கசியிழையம்
2. வெண்ணார் கசியிழையம்
3. மஞ்சள்நார் கசியிழையம்

தசை இழையம்
உடலின் ஒருபகுதி சார்பாக பிறபாகங்களை இயங்கச் செய்வது தசையாகும்.
தசையிழையங்கள் சுருங்கக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளன.
இவற்றில் காணப்படும் கலவகைகளுக்கமைய தசைகள் மூன்று வகைப்படும்.
1. வன்கூட்டுத்தசை
2. மழமழப்பான தசை
3. இதயத்தசை
வன்கூட்டுத்தசை
இது இச்சையுள் தசையாகும்.
நீண்ட கலங்களாலானவை.
கலமுதலுருவில் உள்ள இளம் நிற, கருமை நிற பட்டிகைகள் வெறுங்கண்ணுக்குக் கூடப் புலப்படக்கூடியவை.
இவை என்புகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதால் வன்கூட்டுத்தசை எனவும் எமது விருப்பத்திற்கு ஏற்ப தசைச்சுருக்கம் ஏற்படுவதனால் இச்சையுள் தசை எனவும் அழைக்கப்படும்.
தசை நார்களால் ஆக்கப்பட்டிருக்கும் இந்நார்கள் தொடுப்பிழையத்தால் சூழப்பட்டு தசை உருவாக்கப்படும்.
தூண்டல் ஏற்படும்போது இத்தசைகள் விரைவாகவும், திறமையாகவும் சுருங்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது அத்துடன் இவை விரைவாகக் களைப்படையும்.

மளமளப்பான தசை
இவை இச்சையில் தசை எனவும் வரித்தசை எனவும் அழைக்கப்படும்.
கதிருருவான கலங்களினால் ஆனவை.
கருவையும் அதனைச் சூழ குழியவுருவையும் கொண்டிருக்கும்.
ஏனைய பிரதேசங்களில் நார்களாகக் காணப்படும். இத்தசைநார்கள் நீளமாகக் காணப்படுவதுடன் இவை ஒன்றுடன் ஒன்று தளர்வான தொடர்பைக் கொண்டிருக்கும்.
மேலும் உணவுக்கால்வாய், சிறுநீர்ப்பை ஆகியவற்றின் சுவர்கள் இவ்வகைத் தசைகளினால் ஆக்கப்பட்டிருக்கும்.
இத்தசைகள் மெதுவாகவே சுருங்கும் எனவே எனவே மிக மெதுவாகவே இவை களைப்படைகின்றன.
நீளவாக்கிலான சுருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலை இத்தசைகள் கொண்டுள்ளன.

இதயத்தசை
இது இதயத்தில் மட்டுமே காணப்படும்.
மேலும் முன்னர் கூறப்பட்ட இரு தசைகளிற்கும்/ தசை வகைகளிற்கும் இடைப்பட்ட இயல்புகளை இது கொண்டுள்ளது.
இக்கலங்களில் பலகருக்கள் காணப்படும்.
இவற்றின் தசை நார்கள் வன்கூட்டுத் தசைகள் போன்று நீளமாகக் காணப்படாது. எனினும் இது தசைசார்களைக் கொண்டிருக்கும் ஆனால் தசைநார்களைச் சுற்றி தசைநார்க்கட்டு காணப்படுவதில்லை.
உடலிலிருந்து இத்தசைகள் அகற்றிய பின்னும் கூட இது சுருங்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது.
இத்தசைகள் களைப்படைவதில்லை.

குருதியிழையம்
குருதிக்கலங்கள்
1. செங்குருதிச் சிறுதுணிக்கை          -  Red Blood Cells (RBC)
2. வெண்குருதிச் சிறுதுணிக்கை - White Blood Cells(WBC)
3. குருதிச்சிறுதட்டுக்கள்         - Platelets

குருதித்திரவவிழையம்
குருதித்திரவவிழையம் வைக்கோல் நிறமான பாய்மமாகும்.
அது 90%  நீரையும் 10% தொங்கல் நிலையிலான கூறுகளையும் கொண்டது.
தொங்கல் நிலையிலுள்ள பதார்த்தங்களை உடல்முழுவதும் கொண்டு செல்ல திரவவிழையத்தில் உள்ள நீர் இன்றியமையாததாகும்.
குளோபியூலின், அல்புமின், புரோத்துரொம்பின், பைபிரினோஜன் போன்ற குருதிப்புரதங்களும், கனியுப்புக்களும் தொங்கற் கூறுகளாகும்.
புரோத்துரொம்பின், குருதி உறைதலுக்கு உதவும் குருதிப்புரதமாகும்.

செங்குருதிச் சிறுதுணிக்கை  - Red Blood Cells (RBC)
7µm விட்டமுடையது.
இதனுள் Heamoglobin  எனும் செந்நிறப்பதார்த்தம் காணப்படும். இது காரணமாகவே குருதி செந்நிறமாகக் காணப்படுகின்றது.
ஒரு கன மில்லிலீற்றர் குருதியில் 5000000 செங்குருதிக் கலங்கள் காணப்படும்.
ஒரு துளிக்குருதி அண்ணளவாக 50mm3 கனவளவு கொண்டதாகும்.
இவை சுவாசப்பையில் O2 ஐப் பெற்று உடற்கலங்களுக்கு வினியோகித்தல். – Oxy Heamoglobin ( ஒட்சி ஹீமோகுளோபின்)
உடற்கலங்களில் இருந்து உருவாக்கப்படும்  CO2 ஐச் சேகரித்து சுவாசப்பை களை நோக்கி எடுத்துவரல் - Carboxy Heamoglobin ( காபொட்சி ஹீமோகுளோபின்)
செந்நிறமான Heamoglobin பதார்த்தம்  RBC  கலங்களின் குழியவுருவில் கரைந்துள்ளது.
இவை கருவற்றவை. இதனால் Heamoglobin ஆனது  RBC  கலத்தினுள் இருப்பதற்கு அதிக இடம் கிடைக்கிறது.
இவை பொதுவாக செவ்வென்பு மச்சையில் உருவாகி ஈரலில் அழிவுறுகின்றன.
120 நாட்கள் வாழ்தகவு உடையது.

வெண்குருதிச் சிறுதுணிக்கை - White Blood Cells(WBC)
5 வகையானWBCகள் உண்டு.
இவை சிறுமணி கொண்டவை, சிறுமணியற்றவை என இருவகையாகப் பிரிக்கலாம்.
கரு கொண்டவை
பொதுவாக வாழ்நாள் குறைந்தவை.
RBC ஐ விடப் பருமனில் பெரியவை.
எண்ணிக்கையில் குறைந்தவை  (RBC: WBC   = 600:1)

உற்பத்தியாகும் இடங்கள்
1. என்புமச்சை/ என்புமச்சையில் உள்ள தண்டுக்கலம் (அடிக்கலம்)
2. நிணநீர் இழையத்திலுள்ள ஞாபகக்கலம்/ நிணநீர் இழையம்.


குருதிச்சிறுதட்டுக்கள் (Platelets)
இது மென்சவ்வால் சூழப்பட்ட கலப்பகுதியாகும். ஆகவே கரு காணப்படுவதில்லை.
குருதி உறைதலுக்கு இவை அவசியம்.
பொதுவாக ஒரு கனமில்லி லீற்றர் மனிதக்குருதியில் 250000 குருதிச்சிறு தட்டுக்கள் காணப்படும்.
இவை செவ்வென்பு மச்சையில் உருவாகி ஈரலில் அழியும்.
Note:-
1. குருதி ஒரு திரவ இழையமாகும்.
2. விலங்குகளின் உடல்நிறையில் 40% தசையிழையமாகும். சுருங்கும் ஆற்றல்
   கொண்ட       சிறப்பியல்புடைய கலங்களால் தசையிழையங்கள் ஆக்கப்பட்டு
    ள்ளன.
3.உடலின் அக,புற மேற்பரப்புக்கள் தளமேலணி இழையத்தினால்
   மூடப்பட்டிருக்கும். மேலும் தனிக்கலப்படையால் ஆக்கப்பட்ட எளிய
  மேலணி இழையம் பல்கலப்படையால் ஆக்கப்பட்ட கூட்டு இழையம் என்ற
  இருவகைகளாக அவை உடலில் அமைந்துள்ளன.

அங்கிகளினது உடலின் ஒழுங்கமைப்புக் கோலத்தை அறிதல் அங்கிகளின் உடல் ஒழுங்கமைந்துள்ள முறை
இங்கு கலஎண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கு ஏற்றது போல் உடற்பரப்பு/ உடல்மேற்பரப்பு அதிகரிப்பு ஏற்படவேண்டும். ஆனால் அது சாத்தியப்படாது எனவே வினைத்திறனுடைய பதார்த்தப்பரிமாற்றம் நடைபெற விசேட இழையங்களினால் ஆக்கப்பட்ட தொகுதிகள் அவசியமாகின்றது.
Note:-  
    1. வளர்ச்சியின் போது பிரிவடைந்த கலங்கள் அவை குறித்த தொழில் or  
        தொழில்களுக்காக வியத்தமடைகின்றன.

  2. தாவரங்களின் பல இழையங்கள் இணைந்து தாவரங்களில் இழையத் 
      தொகுதியொன்றை  உருவாக்கும்.
      Eg :- காழ், உரியம்

  3. விலங்குகளின் பல இழையங்கள் இணைந்து விலங்குகளில் இழையத் 
     தொகுதியொன்றை  உருவாக்கும். 
     Eg :- கண், காது, நாக்கு, தோல், இரப்பை

  4. உயிரங்கிகளின் வாழ்வு என்பது உயிர்த்தொழிற்பாடுகளின் ஒழுங்கமைப்பே 
     ஆகும். 
     இவ்வொவ்வொரு தொழிற்பாட்டையும் மேற்கொள்ளவென பல அங்கங்கள் 
     சேர்ந்து உருவாகிய தொகுதிகள் காணப்படுகின்றது. இவை  அங்கத்  
     தொகுதிகள் எனப்படும்.
    Eg :- உணவுக்கால்வாய்த் தொகுதி, சுவாசத்தொகுதி

உடற்தொழிற்பாட்டுக்கு தொகுதிகளின் இன்றியமையாமை

  1. இனப்பெருக்கத்தொகுதி  
      அங்கிகள் தமது இனத்தின் நிலவுகையை உறுதிப்படுத்துவதற்காக  
      இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.

  2. சுவாசத்தொகுதி 
     இனப்பெருக்கம் மற்றும் ஏனைய உயிர்த்தொழிற்பாடுகளை மேற்கொள்ளத் 
     தேவையான சக்தியைப் பெறுவதற்கு அவை சுவாசத்தில் ஈடுபடும்.  
     இவற்றிற்கு மூலப்பொருட்களாக போசனைப் பாதார்த்தங்கள் 
     விளங்குகின்றன.

  3. கழிவகற்றும் தொகுதி
      உயிர்த்தொழிற்பாடுகளின் போது கழிவுப்பொருட்கள் 
      உருவாக்கப்படுகின்றன. அவற்றை 
      உடலில் இருந்து அகற்றுவதற்காக இத்தொகுதி காணப்படுகின்றது.

  4. நரம்புத்தொகுதி & அகஞ்சுரக்கும் தொகுதி
     அங்கிகளின் தூண்டல்களுக்கு ஏற்ப துலங்கல்களைக் காட்டும்  
     தொகுதி (நரம்புகள்/ ஓமோன்கள்)

 5.  வன்கூட்டுத்தொகுதி
      அங்கிகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயரவும் 
      உடலைத்தாங்கும் தொழிற்பாட்டையும் மேற்கொள்கின்றது.
Note:- 
  1.சூழலில் வெற்றிகரமாக வாழ்வதற்கு அங்கிகள் இடையறாது 
     போராடுகின்றன. சூழலுக்குப் பொருத்தப்பாடு உடையதும், வினைத்திறனாக 
     உயிர்த் தொழிற்பாடுகளை  மேற்கொள்வதுமான அங்கிகள் இப்    
    போராட்டத்தில்  வெற்றிபெறும் இது “ தக்கன பிழைத்தல் தகாதன மடிதல்” 
     எனும் Charls Darwin  இன் கூர்ப்புக் கொள்கையின்   வாசகத்திற்கமைவாக  
     நடக்கின்றன.

 2. உயிரங்கிகளின் பருமனும், சிக்கற்தன்மையும் அதிகரிக்கும் போது 
     உடலினுள்  செல்லவேண்டிய, மற்றும் உடலில் இருந்து 
    வெளியேற்றப்படவேண்டிய பதார்த்தங்களின்  அளவும் அதிகரிக்கும் மேலும்     
    உடலினுள் அப்பதார்த்தங்கள் அதிக தூரத்திற்கு எடுத்துச்செல்லப்படவும்  
    வேண்டும். எனவே பரவல் மூலம் நடைபெறும் பதார்த்தப் பரிமாற்றச் 
    செயல்முறை பல்கல அங்கிகளில் வினைத்திறனான பரிமாற்ற முறையாக 
    அமையாது.

 3. உடலில் ஓரு இடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு அமுக்கப் 
     படித்திறனூடாக நடைபெறும் பதார்த்தங்களின் பாய்ச்சல் 
     திணிவுப்பாய்ச்சல் எனப்படும்.

4. உணவுக்கால்வாய்த்தொகுதி, சுவாசத்தொகுதி, சுற்றோட்டத்தொகுதி, 
    கழிவகற்றும் தொகுதி  ஆகியவை அனைத்திலும் திணிவுப்பாய்ச்சல் 
    நடைபெறும். இதனால் பிரதான உடற்செயற்பாடுகள் வினைத்திறனாக 
    நடைபெறும் எனவே அங்கிகளின் நிலவுகைக்காகவும் சூழலின் 
    வெற்றிகரமான வாழ்விற்காகவும் சிக்கலான பல்கல அங்கிகளில்   
    உயிர்தொழிற்பாடுகளை மேற்கொள்ள இவ் அங்கத்தொகுதிகள் மிக 
    அவசியமானவை.

Modified By - www.padippu.lk

No comments:

Post a Comment